வளம் பெருக வேண்டி ஆற்றங்கரைகளில் பெண்கள் சிறப்பு வழிபாடு


வளம் பெருக வேண்டி ஆற்றங்கரைகளில் பெண்கள் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 4 Aug 2023 12:15 AM IST (Updated: 4 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்ட பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வளம் பெருக வேண்டி ஆற்றங்கரையில் சிறப்பு வழிபாடு மேற்கொண்ட பெண்கள் ஒருவருக்கொருவர் உற்சாகமாக மஞ்சள் கயிறு அணிவித்து கொண்டனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

நாகை மாவட்ட பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வளம் பெருக வேண்டி ஆற்றங்கரையில் சிறப்பு வழிபாடு மேற்கொண்ட பெண்கள் ஒருவருக்கொருவர் உற்சாகமாக மஞ்சள் கயிறு அணிவித்து கொண்டனர்.

ஆடிப்பெருக்கு விழா

இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகள் பெரும்பாலும் இயற்கையையும், அதன் மேன்மையையும் போற்றுவதாக அமைந்துள்ளன. அந்த வகையில் காவிரி ஆற்றை போற்றும் விழாவாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பெருக்கு என்றால் பெருகுவது என்று பொருள். ஆடி மாதத்தில்தான் தென்மேற்குப் பருவ மழை வலுவடைந்து காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும்.

அவ்வாறு ஆடி மாதத்தில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள். காவிரி பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டு எல்லையான ஒகேனக்கல்லில் நுழையும்போது தொடங்கி, காவிரி சமுத்திர ராஜனைக் கலக்கும் பூம்புகார் வரையிலும் இருக்கிற மக்களால் ஆடிப்பெருக்கு விழா (ஆடி மாதம் 18-ம் நாள்) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

ஆறுகளில் வழிபாடு

வாழவைக்கும் காவிரியை டெல்டா விவசாயிகள் அன்னையாக வணங்கி வழிபடுகிறார்கள். இந்த நிலையில் காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியில் அமைந்துள்ள மாவட்டமான நாகை மாவட்டத்தில் நேற்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

விழாவையொட்டி நாகை மாவட்டத்தில் வளம் பெருக வேண்டி பெண்கள் ஆறுகளில் சிறப்பு வழிபாடு நடத்தினர். திருமருகல் ஒன்றியத்தில் விவசாயிகள் அரசலாறு, திருமலைராஜன் ஆறு, முடிகொண்டான் ஆறு, வளப்பாறு, ஆழியாறு, நரிமணியாறு, பிராவடையான் ஆறு, வடக்கு புத்தாறு, தெற்கு புத்தாறு ஆகிய ஆறுகளின் மூலம் நீர்ப்பாசனம் பெற்று விவசாயம் செய்து வருகின்றனர்.

புனித நீராடினர்

இந்த ஆண்டு குறித்த நேரத்தில் (ஜூன் 12-ந் தேதி) இந்த ஆண்டு குறித்த காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் காரணமாக இந்த பகுதியில் உள்ள ஆறுகளுக்கு தண்ணீர் வந்துள்ளது. இதையடுத்து திருமருகல் ஒன்றியத்தில் அனைத்து பகுதி மக்களும் ஆடிப்பெருக்கு விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

ஆறுகளில் நேற்று ஏராளமானோர் புனித நீராடினர். இதன் காரணமாக படித்துறைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

படையலிட்டு வழிபாடு

ஆறு, குளங்களின் படித்துறையில் பெண்கள் தலைவாழை இலை விரித்து அதில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, தேங்காய், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம், பழ வகைகள் உள்ளிட்டவற்றை படையலிட்டு விளக்கேற்றி பூஜை செய்தனர்.

பின்னர் அவற்றை ஒரு வாழை மட்டையில் வைத்து ஆற்றில் மிதக்க விட்டனர். தொடர்ந்து ஆற்றுக்கு தீபாராதனை காட்டி வழிபட்டு, வாழ்வாதாரம் செழிக்க உதவியதற்கு நன்றி தெரிவித்தனர்.

புதுமண தம்பதிகள்

புதுமண தம்பதிகள் ஆற்றில் புனித நீராடி புதிய ஆடைகள் அணிந்து கொண்டனர். மேலும் திருமணத்தின் போது மணமக்கள் அணிந்த மாலைகளை ஆற்றில் கொண்டு வந்து விட்டனர். மூத்த சுமங்கலி பெண்களிடம் புதுமண தம்பதிகள் ஆசி பெற்றனர். சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு அணிவித்துக்கொண்டனர்.

அதேபோல திருமணமாகாத இளம்பெண்களும் தங்களுக்கு நல்ல வரன் அமைய வேண்டி மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் வகையில் ஆற்றங்கரையோரம் உள்ள வேப்ப மரத்திலும் மஞ்சள் கயிறு கட்டினர். மேலும் எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, சர்க்கரை பொங்கல் வைத்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். ஆடிப்பெருக்கை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story