உலக மகளிர் தினத்தையொட்டி இலங்கையில் இருந்து திருச்சிக்கு விமானத்தை இயக்கி வந்த பெண்கள்
உலக மகளிர் தினத்தையொட்டி இலங்கையில் இருந்து திருச்சிக்கு பெண்கள் விமானத்தை இயக்கி வந்தனர்.
திருச்சி,
உலக மகளிர் தினத்தையொட்டி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சிக்கு பெண்களை மட்டுமே கொண்டு விமானத்தை இயக்கியது. வழக்கமாக விமானி, துணை விமானி, மேலாளர் உள்ளிட்டவர்கள் ஆண்களாக இருப்பார்கள். ஆனால் உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக நேற்று முன்தினம் பெண் விமானிகள் மூலமாக விமானத்தை அந்த நிறுவனம் இயக்கியது.
விமானியாக சாமிக்க ரூபசிங்க, முதல் அதிகாரியாக பிமலி ஜீவந்தா, கேபின் முதன்மையாளராக சாமரி விஜே சூர்ய மற்றும் பணிப்பெண்கள் என மொத்தம் 8 பெண்கள் பணியாற்றினர். இந்த விமானம் காலை 9.10 மணி அளவில் திருச்சி விமானநிலையத்தில் தரையிறங்கியது. தொடர்ந்து விமானத்தில் இருந்து இறங்கிய அவர்களை அதிகாரிகள் பாராட்டினர்.
பாராட்டு
அதன்பின் விமான நிலைய வளாகத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. விமானத்தை இயக்கிய மகளிர் குழுவினருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் அந்த விமானம் காலை 9.30 மணி அளவில் அதே பெண்கள் குழுவினருடன் இலங்கை தலைநகர் கொழும்புக்கு புறப்பட்டு சென்றது. இதே போல் கடந்த ஆண்டு மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு பெண்களை மட்டுமே கொண்டு விமானம் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது