கணவர் வீட்டு முன் குழந்தைகளுடன் பெண் தர்ணா போராட்டம்
பாவூர்சத்திரத்தில் கணவர் வீட்டு முன் குழந்தைகளுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாவூர்சத்திரம்:
தூத்துக்குடி கீழ சண்முகபுரத்தை சேர்ந்தவர் பொன்னுச்சாமி மகள் பபிதா (வயது 39). தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் குருசாமிபுரத்தை சேர்ந்த முத்து மகன் சக்திவேல் (39). இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 1½ வயது மற்றும் 5 மாதம் என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சக்திவேல் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கொரோனா காலத்துக்கு பிறகு வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகிறார்.
2-வது பிரசவத்துக்காக தூத்துக்குடியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றிருந்த பபிதாவை குழந்தை பிறந்ததும் கணவர் சக்திவேல் பார்க்க சென்றார். அதன்பிறகு 5 மாதம் ஆகியும் அவருடன் எந்த தொடர்பும் இல்லாமல் துண்டித்து உள்ளார். மேலும் அவரை பாவூர்சத்திரம் வீட்டுக்கு அழைத்து வரவும் இல்லை. இதையடுத்து பபிதா குழந்தைகளுடன் நேற்று முன்தினம் மாலையில் தூத்துக்குடியில் இருந்து வாடகை காரில் பாவூர்சத்திரத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு வந்தார். அப்போது தனது துணிகள் உள்ளிட்ட பொருட்களையும் கொண்டு வந்திருந்தார்.
இதை பார்த்ததும் சக்திவேலின் பெற்றோர் காம்பவுண்டு கதவை திறக்காமல் உள்புறமாக பூட்டிக் கொண்டனர். இதனால் பபிதா குழந்தைகளுடன் வீட்டின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பபிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், 'நான் கணவருடன் தான் வாழ விரும்புகிறேன். ஆனால் அதை ஏற்க அவரது பெற்றோர் மறுக்கின்றனர்' என்று கண்ணீர்மல்க கூறினார்.
வெகு நேரத்துக்கு பிறகு சக்திவேல் அங்கு வந்தார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து பபிதாவை குழந்தைகளுடன் தென்காசி பகுதியில் உள்ள ஒரு காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர். இந்த சம்பவம் பாவூர்சத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.