குடிநீர் வசதி கேட்டு பெண்கள் சாலை மறியல்
மேலுரில் குடிநீர் வசதி கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சூரகுண்டு கிராமத்தில் உள்ள 7-வது வார்டு பகுதியில் தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய கோரிக்கை விடுத்து அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மேலூரில் யூனியன் ஆபீஸ் அருகே மதுரை - மேலூர் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து மேலூர் யூனியன் அலுவலகம் நுழைவு வாயிலிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. பின்னர் தகவலறிந்து வந்த மேலூர் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலச்சந்தர் மற்றும் மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக கூறியதைத் தொடர்ந்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் மதுரை - மேலூர் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.