குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
உத்தமபாளையத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உத்தமபாளையம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் சில வார்டுகளில் அவ்வப்போது குடிநீர் வினியோகம் சீராக நடைபெறவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். இந்த நிலையில் 11-வது வார்டு கோட்டைமேடு பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு மேல் குடிநீர் வினியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் செய்வதாக பேரூராட்சி நிர்வாகம் அறிவித்தது. ஆனால் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் பேரூராட்சி தலைவர் முகமது அப்துல் காசிம் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் நேரில் வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உடனே குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.