பெண்கள் அச்சுறுத்தல்களை சமாளிக்க தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும்


பெண்கள் அச்சுறுத்தல்களை சமாளிக்க தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும்
x

பெண்கள் அச்சுறுத்தல்களை சமாளிக்க தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் கூறினார்.

தஞ்சாவூர்

பெண்கள் அச்சுறுத்தல்களை சமாளிக்க தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் கூறினார்.

விழிப்புணர்வு முகாம்

தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனியில் பெண்களுக்கான உரிமை, பாதுகாப்பு குறித்த சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தலைமை தாங்கி மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான ஜெசிந்தா மார்ட்டின் பேசியதாவது:-

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை பெண்கள் பல துறைகளில் சாதனை படைத்து, தனது தனித்துவத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இக்காலத்தில் விவசாயம் முதல் அறிவியல் வரை பல்வேறு துறைகளில் பெண்கள் சாதிக்கின்றனர். இந்திய வரலாற்றில் பல பெண்கள் வியக்க வைக்கும் பல்வேறு செயல்களைப் புரிந்து ஆண்களுக்கு பெண்கள் சரி சமம்தான் என உணர வைத்துள்ளனர்.

சமநிலை பெற வேண்டும்

இருப்பினும், பல்வேறு சவால்களைக் கடந்து பெண்கள் சமநிலை பெற வேண்டிய நிலை உள்ளது. இந்த சமுதாயத்தில் பெண்கள் உடல், மனம், பாலியல் ரீதியான வன்முறைகளால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், பெண்கள் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது, அதிலிருந்து தப்பிப்பதற்கு தற்காப்பு கலைகளைக் கற்றுக் கொள்ள வேண்டும். பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கல்வியறிவு மிக முக்கியம். எனவே பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளைக் கட்டாயம் பள்ளிக்கு அனுப்பி, அவர்களுக்குக் கல்வியறிவு புகட்டுவது அவர்களது கடமை.

மேலும், பெற்றோர்கள் தங்கள் வீட்டில் உள்ள பிள்ளைகளில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என பாரபட்சம் காட்டாமல் இருவருக்கும் சம வாய்ப்பை வழங்க வேண்டும். படித்து முடித்த அனைவரும் அரசு வேலைக்காகக் காத்திருக்காமல் சுயதொழிலில் ஈடுபடலாம். அதன் மூலம் வருமானத்தைப் பெருக்கலாம். அனைத்து மாவட்டம் மற்றும் வட்டங்களிலுள்ள நீதிமன்ற வளாகங்களில் சட்ட உதவி மையம் இயங்கி வருகிறது. அங்கு பெண்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான இந்திராகாந்தி, வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, தஞ்சை சிறப்பு அரசு குற்றவியல் நீதிமன்ற வக்கீல் விவியன் அசோகன், வக்கீல் சங்க தலைவர் அமர்சிங், செயலாளர் சசிகுமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குளோரி குணசீலி, பெண்கள் நல மைய ஒருங்கிணைப்பாளர் விமலா, மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story