மகளிர் இலவச பஸ் இயக்க வேண்டும்
மகளிர் இலவச பஸ் இயக்க வேண்டும்
திருக்காட்டுப்பள்ளியில் இருந்து அகரப்பேட்டை வழியாக மகளிர் இலவச பஸ் இயக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
ஒன்றியக்குழு கூட்டம்
பூதலூர் ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றிய கூட்ட அரங்கில் ஒன்றியக்குழு தலைவர் அரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒன்றிய ஆணையர்கள் பொற்செல்வி, ராஜா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், ஒன்றிய பொறியாளர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். இதன் விவரம் வருமாறு:-
பூண்டி வெங்கடேசன் (பா.ஜ.க.): கொடுக்கப்பட்ட பொருளில் செலவு கணக்கு மட்டுமே இருந்தால் அதை படிக்கவே வேண்டாம் அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். தொடர்ந்து உறுப்பினர்கள் சொல்லிவரும் எதையும் அதிகாரிகளும் கேட்பதில்லை, ஒன்றியக்குழு தலைவரும் கேட்பதில்லை.
கென்னடி (பா.ஜ.க.): பூதலூர் ஜெகன்மோகன் நகர் பகுதியில் ஏராளமான பேர் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். சாலை, மின்வசதி உள்ளிட்ட அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது சாலை செல்லும் இடம் ெரயில்வே துறைக்கு சொந்தமானது என்று சுற்றுச்சுவர் எழுப்ப முயற்சி செய்து வருகிறார்கள். இது குறித்து ஒன்றிய கூட்டத்தில் அந்த இடத்தில் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மகளிர் இலவச பஸ்
கேசவமூர்த்தி (தி.மு.க.): திருக்காட்டுப்பள்ளியில் இருந்து அகரப்ேபட்டை வழியாக மகளிர் இலவச பஸ்கள் இல்லை. இந்த வழியாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுபாலா (அ.தி.மு.க.): தொடர்ந்து நான் கேட்கும் எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படுவதில்லை. சுரக்குடிபட்டி ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும். சாலைகள் அனைத்தும் மோசமான நிலையில் உள்ளன. இதனை சீரமைத்து தர வேண்டும்.
சுப்பிரமணியன் (அ.ம.மு.க.): சானூரப்பட்டி ஊராட்சியில் புதிய மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும். திருக்காட்டுப்பள்ளி செங்கிப்பட்டி சாலைகளில் குறுவை நெல்லை காய வைத்து இரவு நேரங்களில் குவித்து மூடி வைப்பதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்பு நேரிடுகிறது. இதனால் விவசாயிகளுக்கு வசதியாக உலர் களங்கள் கட்டித்தர வேண்டும். ஏரி குளங்களில் விதிகளுக்கு மாறாக கிராவல் மண் எடுக்கிறார்கள். அது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நடவடிக்கை எடுக்கப்படும்
தலைவர்: உறுப்பினர்கள் கோரிக்கைகள் அனைத்தும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.