குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் போராட்டம்
வேலூர் சத்துவாச்சாரியில் குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பராமரிப்பு பணி
வேலூரில் ஒகேனக்கல் குடிநீர் வினியோக பராமரிப்பு பணிகள் காரணமா கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் தடை செய்யபட்டு இருந்தது. பணிகள் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் வேலூர் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் தொடங்கப்பட்டது. ஆனால் சில இடங்களில் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
சத்துவாச்சாரியில் பல இடங்களில் காலையில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்ட போதிலும், பிராமணர் தெருவுக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் நேற்று காலையில் பெண்கள் திரளாக கூடி 19-வது வார்டு கவுன்சிலர் மாலதி வீட்டுக்கு சென்று முறையிட்டனர். அதற்கு அவர் தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
பெண்கள் போராட்டம்
பின்னர் மாலையில் தண்ணீர் வினியோகம் செய்யபட்ட போதும், தங்கள் பகுதிக்கு தண்ணீர் வராத காரணத்தால் ஆத்திரம் அடைந்த பெண்கள் காலி குடங்களுடன் போராட்டம் செய்தனர்.
இனிமேலும் தண்ணீர் கிடைக்க வில்லை என்றால், இன்று கலெக்டர் அலுவகத்தில் முற்றுகை இட்டு போராடுவோம் என்றனர். இது குறித்து அந்த பகுதி கவுன்சிலரிடம் கேட்டபோது, ஒகேனக்கல் குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகள் காரணமாக தண்ணீர் கலங்களாக வருகிறது. இதனால் இந்த பகுதிக்கு தற்போது பொன்னை ஆற்று தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும், இந்த பகுதியில் கணபதி நகர், குறிஞ்சி நகர், முல்லை நகர், பிராமணர் தெரு போன்ற பகுதிகள் மேடாக இருப்பதால் அனைத்து இடங்களுக்கும் தண்ணிர் ஒரே நேரத்தில் கிடைப்பது சிரமமாக உள்ளது. இதனால் பொன்னை ஆற்று தண்ணீரை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு இரவு ஏற்றி, இன்று (திங்கட்கிழமை) அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என்று கூறினார்.