ஓட்டலில் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்ற பெண்கள்
ஆரணி
ஓட்டலில் புகுந்து முகமூடி பெண் கொள்ளையர்கள் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அசைவ ஓட்டல்
ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அசைவ ஓட்டல் நடத்தி வருபவர் வசந்தகுமார் (வயது 40) இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார். அதிகாலையில் காய்கறிகளை வாங்குவதற்காக கடைக்கு வந்தார்.
கடையை திறந்து பார்க்கும் போது கல்லாப்பெட்டி அருகே பணம் சிதறி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பக்க இரும்பு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. எனவே பின்பக்க கதவை உடைத்து திருட்டு நடந்தது தெரியவந்தது.
அங்கு உள்ள கண்காணிப்பு கேமராக்களை பதிவானதை பார்த்தபோது நள்ளிரவு ஒரு மணி அளவில் 2 பெண்கள் சுடிதார் அணிந்த நிலையில் ஸ்வட்டர் போட்டும் முகமூடி அணிந்தவாறு கல்லா பெட்டி அருகே இருந்த சாவியைக் கொண்டே கல்லாவை திறந்து அதிலிருந்து பணத்தை திருடுவது பதிவாகியிருந்தது.
புகார்
இது சம்பந்தமாக வசந்தகுமார் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டை உடைத்து திருடும் சம்பவங்களில் ஆண் திருடர்கள் ஈடுபட்டு வந்ததை த்தான் பார்த்திருப்போம்.
இப்போது பெண்கள் அதுவும் முகமூடி அணிந்து ஓட்டல் பூட்டை உடைத்து திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெண்களை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்த அடையாளம் கண்டு கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.