பெண்களுக்கும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் அமைச்சர் துரைமுருகன் உறுதி


பெண்களுக்கும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் அமைச்சர் துரைமுருகன் உறுதி
x

கல்லூரி மாணவிகளுக்கு வழங்கியதை போல பெண்களுக்கும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என காட்பாடியில் நடந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலூர்

கல்லூரி மாணவிகளுக்கு வழங்கியதை போல பெண்களுக்கும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என காட்பாடியில் நடந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

புதுமைப்பெண் திட்டம் தொடக்கம்

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தொடக்க விழா காட்பாடி அக்சீலியம் கல்லூரியில் நேற்று நடந்தது. விழாவிற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமலுவிஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்து மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

புதுமை திட்டங்கள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்து ஓராண்டிற்குள் எத்தனையோ புதுமை திட்டங்களை அவர் செயல்படுத்தி உள்ளார். அதில் ஒரு திட்டம் தான் இந்த புதுமைப்பெண் திட்டம். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் சீர்திருத்த இயக்கத்தில் பெரியாரின் சீடராக இருந்தவர். அண்ணாவின் தலைமையில் பணியாற்றியவர். தி.மு.க.வின் மூத்த முன்னோடி ஆவார்.

அவர் பெண்களின் உரிமைக்காகவும், கல்விக்காகவும், விடுதலைக்காகவும் பாடுபட்டவர். கலைஞர் முதல்-அமைச்சராக இருந்தபோது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டத்தை கொண்டு வந்தார். தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை மாற்றி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வியில் சேரும் போது அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து இங்கு விழா நடக்கிறது.

பெண்களுக்கு உதவித்தொகை

மாணவிகள் யாரிடமும் கையேந்தாமல் அவர்களுடைய செலவுக்காகவும், போக்குவரத்துக்காகவும் இந்த உதவித்தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். பெற்றோருக்கு கஷ்டம் கொடுக்க தேவையில்லை. மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. தாய்மார்களுக்கு எப்போது என நீங்கள் கேட்கலாம்.? தாய்மார்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே மாணவிகளுக்கு கொடுத்தது போல பெண்களுக்கும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வில் 36 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனை கலைஞர் கொண்டு வந்தார். கலைஞரின் பாதையில் அவருடைய மகன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்பற்றி சிறப்பாக திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் மூலம் மாணவிகள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

இவர் அவர் பேசினார்.

விழாவில் அக்சீலியம் கல்லூரி முதல்வர் ஜெயசாந்தி, உதவி கலெக்டர் பூங்கொடி, துணை மேயர் சுனில்குமார், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், மண்டல குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, முன்னாள் பேரூராட்சி தலைவர் பரமசிவம், மாநகராட்சி கவுன்சிலர்கள் விமலா சீனிவாசன், சீனிவாசன், நிர்வாகி ஆர்.பி.ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story