நாட்டுப்புற பாடல் பாடி நாற்று நடும் பெண் தொழிலாளர்கள்


நாட்டுப்புற பாடல் பாடி நாற்று நடும் பெண் தொழிலாளர்கள்
x

கறம்பக்குடி பகுதியில் குறுவை சாகுபடி பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கட்டும் களம் காணும் கதிர் உழக்கு நெல் காணும் என நாட்டுப்புற பாடல் பாடியபடி பெண் தொழிலாளர்கள் நடவு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

புதுக்கோட்டை

கறம்பக்குடி:

குறுவை சாகுபடி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகாவில் உள்ள 39 ஊராட்சிகளில் 12 ஊராட்சிகள் காவிரி பாசன பகுதிகள் ஆகும். இந்த ஊராட்சிகளில் கடந்த மாதமே குறுவை சாகுபடி தொடங்கி தற்போது நெற்பயிர்கள் வளர்ந்து பச்சை பசேலென காட்சி அளிக்கின்றன. ஆனால் வானம் பார்த்த பூமியாக உள்ள மற்ற 27 ஊராட்சிகளில் தற்போது மழை ஓரளவு பெய்து உள்ள நிலையில் குறுவை சாகுபடி பணியை அப்பகுதி விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

கறம்பக்குடி, பல்லவராயன்பத்தை, மழையூர், முள்ளங்குறிச்சி, திருமணஞ்சேரி, பட்டத்திக்காடு, கருக்காக்குறிச்சி, வெட்டன்விடுதி, அதிரான்விடுதி, மீனம்பட்டி, அம்புக்கோவில் உள்ளிட்ட பகுதியில் நாற்று பறித்து நடவு செய்யும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

பாட்டுப்பாடி நாற்று நடவு பணி

கறம்பக்குடி பகுதியில் நாற்று நடும்போது அலுப்பு தெரியாமல் இருக்க பாட்டு பாடியவாறு நாற்று நடவு செய்வது வழக்கம். மற்ற பகுதிகளில் சமீபகாலமாக சினிமா பாடல்களே அதிகம் பாடப்படுகின்றன. ஆனால் கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் தமிழர் வாழ்வியல் கலாசாரம், காவிரியின் சிறப்பு உள்ளிட்டவற்றை நாட்டுப்புற பாடல்களாக பெண் தொழிலாளர்கள் பாடி வருகின்றனர். நல்ல ராகத்துடன் கோரஷாக பெண்கள் பாடும் பாடல்களை அவ்வழியாக கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் கேட்டு ரசித்து செல்போனில் படம் பிடித்து செல்கின்றனர்.

இதுகுறித்து மழையூர் பகுதியில் நடவு பணியில் ஈடுபட்டிருந்த விவசாய பெண் தொழிலாளர்கள் கூறுகையில், பாட்டுப்பாடி வேலை செய்வது மகிழ்ச்சியாக இருக்கும். நாங்கள் பாடும் பாடல்களில் தமிழர்களின் பண்டையக்கால வரலாறு இருப்பதாக பலரும் பாராட்டி செல்வது பெருமையாக உள்ளது என தெரிவித்தனர்.

மூவேந்தர்களின் பெருமை போற்றும் பாடல்

ரெகுநாதபுரம் பகுதியில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பெயரில் 3 குழுக்களாக பிரிந்து நடவு பணி நடந்தது. அப்போது சோழ மன்னன் குழுவை சேர்ந்த பெண்கள், "கட்டும் களம் காணும் கதிர் உழக்கு நெல் காணும் சொன்ன பொதி காணும் எங்கள் சோழ ராஜா சீமையிலே" என பாட, எதிரே "எட்டேறு கட்டி இடத்தில் ஒரு யானை கட்டி பத்தேறு கட்டி உழும் எங்கள் பாண்டியனார் சீமையில் " என பாண்டியன் குழுவினர் எசபாட்டு பாடினர். சேரன் குழுவினரோ, "தேனே தெவிட்டாத தீம்கனிகள் மொத்தம் உண்டு மான் மயில்கள் ஓடி ஆடும் எங்கள் மலையாளும் சீமை" என பதில் பாட்டு பாடினர். பெண்களின் இந்த எச பாட்டு அப்பகுதியில் செல்வோரை வெகுவாக கவர்ந்தது.


Next Story