விளக்கு தண்டில் நெய்தீபம் ஏற்றி பெண்கள் வழிபாடு


விளக்கு தண்டில் நெய்தீபம் ஏற்றி பெண்கள் வழிபாடு
x

பொங்கல் விழாவை முன்னிட்டு கறம்பக்குடி பகுதியில் விளக்கு தண்டில் நெய்தீபம் ஏற்றி பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இரவு முழுவதும் விழித்திருந்து சுமங்கலி பூஜையும் நடைபெற்றது.

புதுக்கோட்டை

சுமங்கலி பூஜை

தமிழர் திருநாளாம் பொங்கல் விழா பாரம்பரியம் மற்றும் கலாசாரம் சார்ந்து கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் முன்னோர்கள் வழிபட்டு வந்த முறைப்படி பொங்கல் விழாவை கொண்டாடுவது வழக்கம். சிலர் காலை வேளையிலும், மற்றவர்கள் மாலை நேரத்திலும் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.

இவற்றில் புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் வசிக்கும் வல்லநாட்டு நகரத்தார் சமூகத்தினரின் பொங்கல் விழா, பெண்கள் நடத்தும் சுமங்கலி பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது.

விளக்கு தண்டில் நெய்தீபம் ஏற்றி...

இந்த சமூகத்தினரின் வீடுகளில் பொங்கல் விழாவிற்காக செங்கல் மற்றும் களிமண்ணை கொண்டு விளக்கு தண்டு தயார் செய்யப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் திருமணமான ஆண்கள் எத்தனை பேர் உள்ளனரோ அந்த ஏண்ணிக்கைக்கு ஏற்ப இந்த விளக்கு தண்டுகள் உருவாக்கப்படுகின்றன. பொங்கல் நாளின் மாலையில் பூஜை அறையில் பொங்கல் படையல் செய்து இந்த விளக்கு தண்டுகளில் நெய்தீபம் ஏற்றப்படுகிறது.

இந்த தீபம் மறு நாள் அதிகாலை வரை அணையாமல் பாதுகாக்கப்படுகிறது. இதற்காக பெண்கள் இரவு முழுவதும் விழித்திருந்து விளக்கு பூஜை நடத்துவர். இதன்படி கறம்பக்குடி பகுதியில் உள்ள வல்லநாட்டு நகரத்தார் பெண்கள் பொங்கல் விழாவை முன்னிட்டு வீடுகளில் விளக்கு தண்டில் நெய்தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

கப்பல் கவிழ்ந்து விபத்து

இதுகுறித்து கறம்பக்குடி பகுதியை சேர்ந்த நகரத்தார் பெண்கள் கூறுகையில், விளக்கு தண்டில் நெய் தீபம் ஏற்றுவதை மிக பயபக்தியுடன் செய்வோம். விளக்கு அணைந்து விட்டால் குடும்பத்திற்கு ஆகாது என்பதால் யாரும் தூங்குவது இல்லை. இந்த வழிபாடு சுமங்கலி பூஜை போன்றதுதான்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காவிரி பூம்பட்டின பகுதியில் வாழ்ந்த எங்கள் முன்னோர்கள் கடல் கடந்து வாணிபம் செய்து பொருள் ஈட்டி வந்தனர். வெளிநாடு சென்றவர்கள் ஆண்டுதோறும் பொங்கல் விழாவுக்கு ஊர் திரும்புவது வழக்கம். ஒரு ஆண்டில் வெளிநாடு சென்றிருந்தவர்கள் கப்பலில் ஊர் திரும்பி கொண்டிருந்தபோது ஏற்பட்ட ஆழி பேரலையில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

பெண்ணின் மனஉறுதி

இதில் கப்பலில் வந்த வணிகர்கள் மீனவர்களால் காப்பாற்றப்பட்டு கரை திரும்பினர். அதில் ஒருவர் மட்டும் வரவில்லை. அவர் கடலில் மூழ்கி இறந்திருக்க கூடும் என கருதி மற்ற வணிகர்கள் அனைவரும் வீடு திரும்பினர். ஆனால் அவரது மனைவி மட்டும் கணவன் வருவான் என்ற நம்பிக்கையில் கடற்கரை மணலில் தீபம் ஏற்றிவைத்து விடியும் வரை காத்திருந்தாள்.

அந்த பெண்ணின் நம்பிக்கை வீண் போகவில்லை. அவள் எதிர்பார்த்தபடியே கணவன் கரை திரும்பினான். அந்த பெண்ணின் மனஉறுதியை போற்றும் வகையிலும் குடும்பத்தில் உள்ள ஆண்களின் ஆரோக்கியம் நிலைக்க வேண்டியும் இந்த வழிபாடு பாரம்பரியமாக நடக்கிறது என்று கூறினர்.


Next Story