பெண்களைக் கடனாளிகளாக்கும் சிறு நிதி நிறுவனங்கள்


பெண்களைக் கடனாளிகளாக்கும் சிறு நிதி நிறுவனங்கள்
x

பெண்களைக் கடனாளிகளாக்கும் வகையில் செயல்பட்டு வரும் சிறு நிதி நிறுவனங்களை கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்

போடிப்பட்டி,

பெண்களைக் கடனாளிகளாக்கும் வகையில் செயல்பட்டு வரும் சிறு நிதி நிறுவனங்களை கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுய உதவிக் குழு

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கொரோனா தாக்குதலால் ஏற்பட்ட மிகப்பெரிய பின்னடைவுக்குப் பிறகு பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாக சிக்கல்களையே சந்தித்து வருகின்றன. இதனால் பணத் தேவையைப் பூர்த்தி செய்ய சிறு நிதி நிறுவனங்களை நாடும் நிலை பல குடும்பங்களுக்கு ஏற்படுகிறது. இத்தகைய ஸ்மால் பைனான்ஸ் எனப்படும் சிறு நிதி நிறுவனங்கள் பாமர மக்களிடையே சுய உதவிக் குழுக்கள் (சுருக்கமாக..குழு) என்ற பெயரிலேயே அறியப்படுகின்றன. அரசு மூலம் நடத்தப்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களை போலவே இதுவும் என்று எண்ணி ஏழை, நடுத்தர பெண்கள் தயக்கமில்லாமல் இதுபோன்ற நிதி நிறுவனங்களிடம் கடன் பெறுகின்றனர். இதில் பலரும் தொழில் செய்வது, மருத்துவப் பயன்பாடு, சுப நிகழ்ச்சிக்கான செலவு போன்ற முக்கிய நிகழ்வுகள் எதுவும் இல்லாமலே, கிடைக்கிறது என்பதற்காகவே கடன் வாங்குகிறார்கள்.அதிலும் குடிகார கணவனின் தொல்லை தாங்காமல், அவருக்கு கடன் வாங்கிக் கொடுக்கும் பெண்களும் உள்ளனர் என்பது வேதனையான உண்மையாகும்.

அதிக வட்டி

தினசரி தவணை செலுத்தும் திட்டம், வாரம் தோறும் தவணை செலுத்தும் திட்டம், மாதம் தோறும் தவணை செலுத்தும் திட்டம் என பலவிதமான திட்டங்களை இந்த நிறுவனங்கள் செயல்படுத்துகின்றன.குறைந்த வட்டியில் கடன் கொடுப்பது போல ஒருவிதமான மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற நிறுவனங்கள் அதிக வட்டி வசூல் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்தநிலையில் ஒரு குழுவில் உள்ள ஏதோ ஒரு பெண் குறிப்பிட்ட நாளில் தவணைத்தொகை செலுத்த முடியாமல் போனால் அந்த தொகையை குழுவில் உள்ள மற்ற உறுப்பினர்களே செலுத்த வேண்டும். இதனால் பணம் செலுத்த முடியாதவர்களை மற்ற பெண்களுடன் சேர்ந்து, நிறுவன ஊழியர்களுடன் வீட்டுக்கே சென்று அவதூறாகப்பேசும் சம்பவங்கள் அரங்கேறுகின்றன.இதனால் ஒரு கடனை திருப்பி செலுத்த இன்னொரு கடன் என அடுக்கடுக்காக கடன் வாங்கி விட்டு, கடனாளியாகி தவிக்கும் பெண்கள் பலர் உள்ளனர்.உழைத்து களைத்து வீடு திரும்பும் உழைக்கும் மகளிர் சிலர், வெறுங்கையுடன் வீடு சென்று சேரும் நிலையை இதுபோன்ற சிறு நிதி நிறுவனங்கள் உருவாக்கி விடுகின்றன.இதில் நேர்மையாக செயல்படும் சிறு நிதி நிறுவனங்கள் விதி விலக்காகும்.

விழிப்புணர்வு

எனவே பல குடும்பங்களை கடனாளியாக்கி தவிக்க விடும் சிறு நிதி நிறுவனங்களை ஆய்வு செய்து, தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.அங்கீகாரமில்லாத கந்து வட்டி கும்பலிடம் தப்பி...அங்கீகரிக்கப்பட்ட கும்பலிடம் சிக்கும் நிலையே பல பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது.எனவே சிறு நிதி நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்ற பெயரில் இயங்க தடை விதிக்க வேண்டும்.மகளிர் முன்னேற்றத்துக்காக அரசு மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்கி வருகிறது.எனவே சிறுநிதி நிறுவனங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அரசு மகளிர் சுய உதவிக்குழுக்கள் குழுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்.

-------------------


Next Story