நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தல்


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில்  காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை  குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தல்
x

குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருநெல்வேலி

குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் குறைதீர்க்கும் நாள்

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

நாங்குநேரி அருகே உள்ள முனைஞ்சிப்பட்டி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கோசலை தலைமையில் கீரன்குளத்தை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீசார் அவர்களிடம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து செல்லுமாறு அறிவுறுத்தினர். பின்னர் அவர்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

முனைஞ்சிப்பட்டி ஊராட்சி கீரன்குளத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். எங்கள் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து குழாய்கள் அமைத்து தெருக்களில் தண்ணீர் பிடித்து வந்தோம். தற்போது புதிய திட்டத்தின் கீழ் எங்கள் பகுதியில் இருந்த குழாய்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் மோட்டார் பம்ப் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுக்கின்றனர். இதனால் எங்களுக்கு தண்ணீர் சரிவர கிடைப்பதில்லை. எனவே தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தனர்.

குளத்தில் கலக்கும் கழிவுநீர்

மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் அப்துல்காதர் கோயா தலைமையில் கொடுத்த மனுவில், மேலப்பாளையம் 50-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் கன்னிமார் குளம் அமைந்துள்ளது. அப்பகுதிக்கு நிலத்தடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த குளத்தில் 12 தெருக்களின் கழிவுநீர் கலக்கிறது. எனவே துர்நாற்றம் வீசி வருவதுடன் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் வசிக்க முடியவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளனர்.

தியாகராஜநகரை சேர்ந்தபொதுமக்கள் செல்வக்குமார் தலைமையில் கொடுத்த மனுவில், நெல்லை அரசு மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே எடுக்கும்போது அதற்கான முடிவுகள் உடனடியாக வழங்கப்படாமல் ஒரு வாரத்திற்கு பின்னர் கொடுக்கின்றனர். இதனால் நோயாளிகள் அடுத்தகட்ட சிகிச்சைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். எனவே அதுகுறித்து நடவடிக்கை எடுத்து உடனடியாக முடிவுகள் வழங்க வேண்டும், என கூறியிருந்தனர்.

வீட்டுமனை பட்டா

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் ராமையன்பட்டி பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வக்குமார் மற்றும் அந்த பகுதி மக்கள் வந்து கொடுத்த மனுவில், ராமையன்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட யாதவர் தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய இவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறிஉள்ளனர்.

சாலை விரிவாக்கம்

நாம் தமிழர் கட்சியினர் வணிகர் பாசறை நிர்வாகி செல்வின் தலைமையில் கொடுத்த மனுவில், களக்காடு அருகில் ஆடு, மாடு சந்தை அமைத்து தர வேண்டும். கேரளா, தென்காசி உள்ளிட்ட ஊர்களில் இருந்து தூத்துக்குடி செல்லக்கூடிய கனரக வாகனங்கள் பகலில் பாளையங்கோட்டை வழியாக செல்ல தடைவிக்கப்பட்டுள்ளது. இந்த கனரக வாகனங்கள் பாளையங்கோட்டை நகருக்குள் வராமல் ஆரைகுளத்தில் இருந்து ஜோதிபுரம் வழியாக செல்ல ஒரு இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையை விரிவுபடுத்தி பாளையங்கோட்டைக்குள் வாகனங்கள் செல்லாமல் தூத்துக்குடிக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறி உள்ளனர்.


Next Story