சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மகளிர் துறை சார்பாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.
காரைக்குடி,
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மகளிர் துறை சார்பாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் மகப்பேறு ஆரோக்கியம் மற்றும் மனநலம் என்ற தலைப்பிலான சர்வதேச மாநாட்டின் தொடக்க விழா பல்கலைக்கழக கருத்தரங்க கூட்டத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக பதிவாளர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். மகளிரியல் துறை தலைவர் பேராசிரியை மணிமேகலை வரவேற்றார். சிங்கப்பூர் நான் யாங் டெக்னாலஜிகல் யூனிவர்சிட்டி பேராசிரியை சீதாலட்சுமி பங்கேற்று பேசியதாவது;- மகப்பேறு காலம் மற்றும் பிரசவம் இரண்டுமே ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கிய நிலைகளாகும். தற்போது பெண்கள் எண்ணற்ற சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். சுகாதாரத்தை பேணுவதன் மூலம் தரமான மனித மூலதனம் மற்றும் பொருளாதார நன்மைகளையும் அடைய முடியும். குடும்ப மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு ஆணிவேராக இருக்கும் பெண்களின் உடல் மற்றும் உணர்வு நலத்தை பாதிக்கும் நோய்களையும், சூழ்நிலைகளையும் கண்டறிந்து அவற்றை சரி செய்வது அவசியம் என்றார்.
கலெக்டர் மதுசூதன்ரெட்டி பேசுகையில், சுகாதார பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளில் இந்தியாவில் தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது. பெண்களின் மகப்பேறு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் உள்ளன. திட்டங்கள் உங்களை அணுகுவதன் மூலம் இந்த இலக்கை அடைய முடியும். கர்ப்பிணிகளை சுற்றி இருக்கும் சுற்றுச்சூழல்கள் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் இன்றியமையாத காரணியாக உள்ளது. சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளும் ஆராய்ச்சியாளர்கள் சமுதாயத்தில் நல்வாழ்வுக்கான தகவல்களை நல்ல கட்டுரைகளின் மூலம் தெரிவித்து மாற்றத்தை கொண்டு வர வேண்டும். பெண்களின் மகப்பேறு மற்றும் மனநலம் பற்றிய பல்வேறு தகவல்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார். இந்த நிகழ்சில் பலர் கலந்து கொண்டனர்.