தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில்கணவருடன் பெண் தர்ணா போராட்டம்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் கணவருடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்மாநகரம் வீரன் சுந்தரலிங்கம் நகரை சேர்ந்த இசக்கியம்மாள் என்ற பெண் தனது கணவர் முத்து செல்வன் மற்றும் குழந்தையுடன் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட அந்த பெண் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில், கடந்த 29.8.2022 அன்று நள்ளிரவு 1 மணியளவில் எனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் ஸ்ரீவைகுண்டம் போலீசார் சிலர் எங்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர். திருட்டு வழக்கு தொடர்பாக எனது கணவரிடம் விசாரிக்க வேண்டும் எனக் கூறி வீட்டில் இருந்த பொருட்களை சூறையாடியதுடன், சாதி பெயரை சொல்லி அவதூறாக பேசினர். இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம், குழந்தைகள் ஆணையம் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினேன். இந்த நிலையில் இந்த புகாரை வாபஸ் பெற சொல்லி வேறு நபர்கள் மூலம் மிரட்டி வருகின்றனர். எனவே, எனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை சூறையாடி, அவதூறாக பேசிய போலீசார் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.