மகளிர் உரிமைத் தொகை திட்டம்: முகாம் அமைப்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...!


மகளிர் உரிமைத் தொகை திட்டம்: முகாம் அமைப்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...!
x

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக முகாம் அமைப்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை,

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப பதிவுக்கான சிறப்பு முகாம்கள் அமைப்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மகளிர் (கலைஞர்) உரிமைத்தொகை தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் மாவட்ட சிஇஓக்களுக்கு, மகளிர் உரிமைத் தொகை திட்ட சிறப்பு பணி அலுவலர் இலம்பகவத் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களை முகாம் பணிகளில் ஈடுபடுத்த பரிந்துரை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு நியாய விலைக்கடைக்கும் தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவார்கள். இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள், நியாய விலைக்கடைகளில் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பத்தை பெற முகாம்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

ரேஷன் கடைகளில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களை கொண்டு மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் பெறப்படும்.

மேலும், தன்னார்வலர்கள் எந்தெந்த நியாயவிலை கடை பகுதிகளில் வசிக்கிறார்கள் என்ற விவரம் விரைவில் வழங்கப்படும் என்றும் நியாய விலைக்கடை அளவிலான பணி ஒதுக்கீடுகளை வருவாய் வட்ட அளவில் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story