மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப வினியோகம் தொடக்கம்
நாகை மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப வினியோகம் நேற்று தொடங்கியது. இதற்கான பணிகளை கூடுதல் செயலாளர் ஆய்வு செய்தார்.
நாகை மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப வினியோகம் நேற்று தொடங்கியது. இதற்கான பணிகளை கூடுதல் செயலாளர் ஆய்வு செய்தார்.
மகளிர் உரிமை தொகை
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்கான கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இதில் ரூ.1,000 பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள் நாகை மாவட்ட பகுதிகளில் நேற்று முதல் வீடு, வீடாக வினியோகம் செய்யப்பட்டன.
இதற்கான பணிகளை அரசு கூடுதல் செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான ரமேஷ் சந்த் மீனா ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பங்களை பெறுவதற்காக பொதுமக்கள் ரேஷன் கடைக்கு வர தேவையில்லை. குடும்ப அட்டை பதிவு செய்யப்பட்டுள்ள ரேஷன் கடை பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆவணங்களை இணைக்க தேவையில்லை
விண்ணப்பத்தினை பெற்றுக்கொண்ட குடும்பத்தலைவிகள் அதை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும்.
விண்ணப்பம் பதிவு செய்யும்போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவண நகலையும் இணைக்க தேவையில்லை. மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்ய வருவாய்த்துறையில் வருமானச்சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளையும் விண்ணப்பித்து பெற தேவையில்லை. விண்ணப்ப பதிவு முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும்.
தகவல் தெரிவிக்கப்படும்
விண்ணப்ப பதிவு முகாம் ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடைபெறும். முகாம் நடைபெறும் குடியிருப்புகள், தெருக்கள், வார்டு மற்றும் நடைபெறும் நாட்கள் குறித்த விவரங்கள் ரேஷன் கடை தகவல் பலகை மூலமாக தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்த பயிற்சிகள் அளிக்கப்படுவதையும் கூடுதல் செயலாளர் ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தாசில்தார்கள் ரமேஷ்குமார், ஜெயசீலன், சுதர்சன் ஆகியோர் உடன் இருந்தனர்.