மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப படிவம் பதிவேற்றம் குறித்த பயிற்சி முகாம்கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்


மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப படிவம் பதிவேற்றம் குறித்த பயிற்சி முகாம்கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்
x

மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப படிவம் பதிவேற்றம் குறித்த பயிற்சி முகாமை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்

ஈரோடு

ஈரோட்டில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான விண்ணப்ப படிவம் பதிவேற்றம் செய்வது குறித்து பயிற்சி முகாமை மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்.

விண்ணப்ப படிவம் -டோக்கன்

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அன்று கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,207 ரேஷன் கடைகளில் 7 லட்சத்து 67 ஆயிரத்து 316 ரேஷன் கார்டுதாரர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கன் நேற்று காலை முதல் வினியோகம் செய்யும் பணி நடைபெற்றது.

கலெக்டர் ஆய்வு

ஈரோடு திண்டல் சக்திநகர் மற்றும் பாலாஜி கார்டன் பகுதிகளில், மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கன் வழங்கும் பணியை மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார். முன்னதாக அவர், உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப படிவம் பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் வருகிற 24-ந்தேதி அன்று நடைபெறுவதையொட்டி, ஈரோடு திண்டல் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன் ஏற்பாடு பணிகள் குறித்தும், ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில், மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பம் பதிவேற்றம் மேற்கொள்ளும் பணியில் ஈடுபட உள்ள இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்காக நடைபெற்ற பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் தன்னார்வலர்களிடம் கூறுகையில், 'விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும்போது அரசின் வழிகாட்டு முறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்,' என்று அறிவுறுத்தினார்.

இந்த முகாமில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ், பொது வினியோக திட்ட துணை பதிவாளர் கந்தசாமி, ஈரோடு தாசில்தார் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வினியோகம் இல்லை

ஈரோடு மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் மற்றும் டோக்கன் பெற்ற ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்ப படிவம் பதிவேற்றம் செய்யும் முகாம் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இந்த விண்ணப்ப படிவம் பதிவேற்றும் முகாமில், ரேஷன் கார்டு தாரர்கள் தங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், மின் கட்டண ரசீது உள்ளிட்ட ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் 1,207 ரேஷன் கடைகளிலும் மகளிர் உரிமைத்தொகைக்கான டோக்கன் மற்றும் விண்ணப்ப படிவம் வழங்கும் பணியில் ரேஷன் கடை பணியாளர்கள் ஈடுபட்டு வருவதால், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம் செய்யபட மாட்டாது எனவும், வருகிற 24-ந் தேதி முதல் மீண்டும் வழக்கம்போல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story