மாவட்டத்தில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 439 இல்லத்தரசிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை; அமைச்சர் முத்துசாமி வழங்கி தொடங்கி வைத்தார்
ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 439 இல்லத்தரசிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை அமைச்சர் முத்துசாமி வழங்கி தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 439 இல்லத்தரசிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை அமைச்சர் முத்துசாமி வழங்கி தொடங்கி வைத்தார்.
மகளிர் உரிமைத்தொகை
தமிழ்நாட்டில் உள்ள இல்லத்தரசிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் மூலம் மாதம் தலா ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரத்தில் நடந்த அரசு விழாவில் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் திண்டல் வேளாளர் கல்லூரி கஸ்தூரிபா காந்தி கலையரங்கில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட தொடக்க விழா நடந்தது.
விழாவுக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். அந்தியூர் செல்வராஜ் எம்.பி., ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் வழங்கினார்
தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு-ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி விழாவில் கலந்து கொண்டு, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தேர்வு பெற்று மாதம்தோறும் தலா ரூ.1000 பெறும் இல்லத்தரசிகளுக்கு வங்கி ஏ.டி.எம். அட்டைகள் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த ஒரு திட்டத்தை செயல்படுத்தினாலும் அது பெண்களை மையப்படுத்தியே இருக்கிறது. பெண்களுக்கு இலவச பஸ் பயணம், மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டங்களை வழங்கி உள்ளார். காலை உணவு திட்டம் மூலம் காலை நேரத்தில் குடும்ப பெண்கள் சிரமப்படுவதை தவிர்த்து இருப்பதுடன், குழந்தைகள் பள்ளிக்கூடங்களில் வயிறார உணவு சாப்பிடும் மகிழ்ச்சியை பெண்களுக்கு அளித்து உள்ளார். உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்குவதன் மூலம் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
2,16,439 இல்லத்தரசிகள்
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பயன்பெற திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 5 லட்சத்து 38 ஆயிரத்து 645 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 439 இல்லத்தரசிகள் உரிமைத்தொகை பெறுகிறார்கள்.
பெண்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு அனைத்து திட்டங்களையும் செய்து வரும் முதல்-அமைச்சருக்கு நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். உங்கள் பகுதிகளின் தேவைகளை எங்களுக்கு தெரியப்படுத்தினால் உங்களுக்காக நாங்கள் இன்னும் பணிகள் செய்ய வசதியாக இருக்கும்.
இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.
முன்னதாக ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா வரவேற்றார். ஆர்.டி.ஓ. சதீஸ்குமார் நன்றி கூறினார்.
அதிகாரிகளுக்கு பாராட்டு
விழாவில் கூடுதல் கலெக்டர் டாக்டர் மனிஷ், துணை மேயர் வி.செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணிகந்தசாமி, துணைத்தலைவர் கஸ்தூரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், மண்டலக்குழு தலைவர்கள் பி.கே.பழனிச்சாமி, ப.சசிக்குமார், தாசில்தார்கள் ஜெயக்குமார், பூபதி, பாலகுமார், தியாகராஜன், உத்தரசாமி, மாலதி, சங்கர்கணேஷ், பெரியசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரகுமார், தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியம், துணை செயலாளர் ஆ.செந்தில்குமார் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மகளிர் உரிமைத்திட்டப்பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரத்தில் கலந்து கொண்ட விழாவின் நேரலை ஒளிபரப்பப்பட்டது. நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்டமாக 2 ஆயிரம் பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.