மகளிர் உரிமைத் தொகை: இன்று முதல் டோக்கன் வினியோகம்
டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்களை வீடு வீடாக சென்று விநியோகம் செய்யும் பணியில் 3,400 ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவித்தார். 2023-24-ம் நிதியாண்டில் இந்த திட்டத்தைச் செயல்படுத்திட ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தைச் செப்டம்பர் 15ஆம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காகத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் மக்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. மக்களுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் கடை பணியாளர்கள் டோக்கன், விண்ணப்பங்களை வழங்க உள்ளனர். ஒவ்வொரு ரேஷன் கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக வழங்க உள்ளனர்.
ரேஷன் கடைகளில் டோக்கன் குறித்த தகவல்கள் அறிவிப்பு பலகையில் வைக்கப்பட உள்ளது. 24-ம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இரண்டு கட்டங்களாக நடக்கும் சிறப்பு முகாம்களில் திட்டத்திற்கான விண்ணப்பப்பதிவு நடைபெறுகிறது. டோக்கன்கள் மற்றும் விண்ணப்பங்களை வீடு வீடாக சென்று விநியோகம் செய்யும் பணியில் 3,400 ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.