வங்கியை முற்றுகையிட்டு மகளிர் சுய உதவி குழுவினர் போராட்டம்
அரியமங்கலத்தில் வங்கியை முற்றுகையிட்டு மகளிர் சுய உதவி குழுவினர் போராட்டம் நடத்தினர்.
விஷன் மைக்ரோ கிரெடிட் அண்ட் சோசியல் பவுண்டேஷன் என்ற மைக்ேரா நிதி நிறுவனம் திருச்சி சோமரசம்பேட்டையில் நிர்வாக அலுவலகம் அமைத்து செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மகளிர் சுய உதவி குழுவினரை அணுகி வங்கி மூலமாக கடன் பெற்று கொடுத்ததாக தெரிகிறது. இதனிடையே திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டியில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையிலிருந்து நிலுவையில் உள்ள கடன் தொகையை செலுத்துமாறு அந்தந்த மகளிர் சுய உதவி குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. கடன் தொகையை 1½ ஆண்டுகளுக்கு முன்பே கட்டி முடித்த நிலையில் நோட்டீஸ் வந்ததால் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் வங்கியை அணுகி கேட்டபோது, தங்கள் பெயரில் கடன் நிலுவைத் தொகை உள்ளதாகவும், அதனை உடனே கட்டுமாறு வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விவரங்களுக்கு மைக்ரோ நிதி நிறுவனத்தை அணுகுமாறு வங்கி தெரிவித்தது. அதன்பின் மகளிர் சுயஉதவி குழுவினர் நிதிநிறுவனத்தினரிடம் கேட்டபோது, தாங்கள் செலுத்திய பணத்தை நாங்கள் வங்கியில் செலுத்தி விட்டோம், நீங்கள் வங்கியை அணுகுங்கள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மகளிர் சுய உதவி குழுவினர் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலையில் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்த அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து மகளிர் சுயஉதவிகுழுவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இது தொடர்பாக மகளிர் சுயஉதவிகுழுவினர் கூறும்போது, மைக்ரோ நிதி நிறுவனத்திடம் கடன் தொகையை செலுத்தி விட்டோம். அதற்கான ரசீதும் எங்களிடம் உள்ளது. இந்த நிலையில் வங்கி திடீரென்று எங்களுக்கு நிலுவைத் தொகை இருப்பதாக கூறி நோட்டீஸ் அனுப்பியது அதிர்ச்சியை அளிக்கிறது. கடன் பெற்ற தொகை முழுவதுமாக செலுத்தி விட்ட நிலையில் நாங்கள் வங்கிக்கு பணம் கட்டமாட்டோம். இதேபோல் 225 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளது என்றனர்.