கூட்டுறவு சங்கத்தை பெண்கள் முற்றுகை
கூட்டுறவு சங்கத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள தினைக்குளம் ஊராட்சிக்குட்பட்ட அத்தியசட்சபுரம் கிராமத்தில் மகளிர் மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 2023-ம் ஆண்டிற்கான கடல் மீனவர் மகளிர் சேமிப்பு நிவாரண திட்டத்திற்கான சந்தா தொகை ரூ.1,610 செலுத்தி மீன்துறையினரிடம் ரசீது பெற்றுள்ளனராம். இந்நிலையில் 734 உறுப்பினர்களிடமும் மீண்டும் பணம் கட்ட சொல்லி மகளிர் சுய உதவி குழுவிடம் மீனவளத்துறை அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடல் மீனவர் மகளிர் சேமிப்பு குழுவினர் நாங்கள் கட்டிய பணத்திற்கு ரசீது வைத்துள்ளோம். எனவே மீண்டும் நாங்கள் பணம் செலுத்த முடியாது என வாதிட்டனர்.
இதனால் தாங்கள் செலுத்திய சந்தா தொகையை சங்க நிர்வாகிகள் ரூ.11 லட்சம் வரை மோசடி செய்திருக்கலாம் என கூறினர். மேலும், அத்தியட்சபுரம் கூட்டுறவு சங்க அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு உண்ணாவிரதம் இருந்தனர். இதுகுறித்து அறிந்த அதிகாரிகள், அவர்களிடம் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து தினைக்குளம் ஊராட்சி தலைவர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர்.