பெண்கள் திடீர் சாலை மறியல்
ஒருதலைபட்சமாக வழக்குப்பதிவு செய்ததாக கூறி பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்:
விழுப்புரம் கே.கே.சாலை அண்ணா நகர் சந்திப்பு அருகில் ஒருவரது இறுதி ஊர்வலத்தில் அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஆட்டம் ஆடிக்கொண்டபடி வந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் ஹாரன் அடித்தவாறு வழிவிடுமாறு கூறியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக்கொண்டனர். இதுகுறித்து ஜெகதீசன், விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் கே.கே.சாலை அண்ணா நகரை சேர்ந்த சஞ்சய், குமரேசன் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் சஞ்சய் அளித்த புகாரின்பேரில் குமரன், ஜெகதீசன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் கே.கே.சாலை அண்ணா நகரை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று மாலை 3 மணியளவில் விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்து போலீஸ் நிலையம் எதிரே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நான்குமுனை சந்திப்பில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர்கள் மூர்த்தி, காமராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், இப்பிரச்சினை தொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தவில்லை என்றும், எங்கள் பகுதியை சேர்ந்த நபர்களை கைது செய்யும் அளவிற்கு ஒருதலைபட்சமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் முறையிட்டனர். இதை கேட்டறிந்த போலீசார், இப்பிரச்சினை குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றுகூறி அவர்களை சமாதானப்படுத்தினர். அதன் பிறகு அவர்கள் 3.30 மணியளவில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.