மக்களை சென்றடைய அதிகாரிகள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும்
தமிழக அரசு செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடைய அதிகாரிகள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என்று அரசு முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் அறிவுறுத்தினார்.
தமிழக அரசு செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடைய அதிகாரிகள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என்று அரசு முதன்மை செயலாளர் அதுல் ஆனந்த் அறிவுறுத்தினார்.
ஆய்வுக்கூட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழக அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள், மக்கள் நலத்திட்டங்கள், அரசின் நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அரசு முதன்மை செயலாளரும், தொழிலாளர் நல ஆணையரும், தர்மபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலருமான அதுல் ஆனந்த் தலைமை தாங்கினார். கலெக்டர் சாந்தி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு அரசு அறிவித்து, செயல்படுத்தி வருகிற அனைத்து வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களை முழுமையாக சென்றடைய அனைத்து துறை அலுவலர்களும் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.
வங்கியாளர்களுக்கு அறிவுரை
இதைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வங்கிகளின் செயல்பாடுகள் குறித்தும், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடனுதவிகள் குறித்தும் விரிவாக அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வேளாண் கடனுதவிகள், சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் மானியத்துடன் கூடிய கடனுதவிகள், தாட்கோ மானியத்துடன் கூடிய கடனுதவிகள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடனுதவிகள் உள்ளிட்ட அனைத்து கடனுதவிகளையும் தகுதியான நபர்களுக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வங்கியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முதுமை திட்ட இயக்குனர் தீபனாவிஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.