செயலாளர் இல்லாததால் திருமலாபுரம் ஊராட்சியில் பணிகள் முடக்கம்; கலெக்டர் அலுவலகத்தில் மனு


செயலாளர் இல்லாததால் திருமலாபுரம் ஊராட்சியில் பணிகள் முடக்கம்; கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 21 Sept 2023 2:30 AM IST (Updated: 21 Sept 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

செயலாளர் இல்லாததால் திருமலாபுரம் ஊராட்சியில் பணிகள் முடங்கியுள்ளதால் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, ஆண்டிப்பட்டி ஒன்றியம் திருமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கனிராஜா தலைமையில் பொதுமக்கள் நேற்று வந்தனர். மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் அவர்கள் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில், "திருமலாபுரம் ஊராட்சியில் கடந்த 4 மாத காலமாக ஊராட்சி செயலாளர் இல்லை. இதனால், 13 உட்கடை கிராமங்களை கொண்ட இந்த ஊராட்சியில் பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், மின்சாரம், சாக்கடை வசதி மற்றும் அரசு வழங்கக்கூடிய நலத்திட்டங்களையும் செயல்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

மேலும் தூய்மை பணியாளர்கள் மற்றும் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு கடந்த 5 மாத காலமாக ஊதியம் வழங்காமல் முடக்கப்பட்ட ஊராட்சியாக திருமலாபுரம் இருந்து வருகிறது. இதுகுறித்து ஆண்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவொரு மேல்நடவடிக்கையும் இல்லை. இதற்கு முன்பு ஊராட்சியில் செய்த வேலைகளுக்கு ரசீது எதுவும் போடாமலும், புதிய வேலைகள் செய்ய முடியாமலும் ஊராட்சி நிர்வாகம் இருந்து வருகிறது. ஊராட்சி தலைவருக்கான அதிகாரம் இருந்தும், அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கின்றனர். எனவே, மக்களின் நலன் கருதி ஊராட்சிக்கு முழுநேர செயலாளரை நியமிக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.


Next Story