தொழிலாளி கழுத்தை அறுத்து படுகொலை
பாலக்கோடு அருகே தொழிலாளி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே தொழிலாளி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஆண் பிணம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அண்ணாமலைஅள்ளி அரசு மதுபான கடை முன்பு நேற்று முன்தினம் இரவு ரத்த வெள்ளத்தில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது மோட்டார் சைக்கிள் அருகில் அந்த நபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
தொழிலாளி
விசாரணையில், அந்த நபர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கருக்கனஅள்ளி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சூர்யா (வயது41) என்பதும், இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கொலை செய்யப்பட்ட சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா?, அல்லது கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பாலக்கோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.