9 மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்த தொழிலாளி கைது


9 மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்த தொழிலாளி கைது
x

எரியோட்டில், போலீசாருக்கு சவால் விடும் வகையில் 9 மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

தீ வைத்து எரிப்பு

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு மாலைகோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவர், மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர், தனது வீட்டின் முன்பு மொபட்டை நிறுத்தியிருந்தார்.

இதேபோல் எரியோடு துரைச்சாமி நாடார் தெரு சேர்ந்த பூண்டு வியாபாரி கோபால். இவரும், தனது வீட்டின் முன்பு மொபட்டை நிறுத்தியிருந்தார். இந்த 2 மொபட்டுகளும் நள்ளிரவில் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்தன. அக்கம்பக்கத்தினர் மொபட்டுகளில் எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.

இதுகுறித்து எரியோடு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்தார். நள்ளிரவில் மர்ம நபர், மொபட்டுகளை தீ வைத்து எரித்தது தெரியவந்தது.

பீதி அடைந்த பொதுமக்கள்

இதேபோல் கடந்த ஒரு மாத காலத்தில் எரியோடு துரைச்சாமி நாடார் தெருவை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் கார்த்திக், பன் வியாபாரி முருகன், எரியோடு வேன்டிரைவர் ராஜா, தென்னம்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் சவுந்திரராஜன், எரியோடு நடுத்தெருவை சேர்ந்த வியாபாரி சின்ராஜ், பாண்டியன்நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன், எரியோடு வடக்கு தெருவை சேர்ந்த சக்திவேல் ஆகியோரின் மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டுகள் அடுத்தடுத்து தீ வைத்து எரிக்கப்பட்டன.

எரியோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவங்களால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. வீட்டின் முன்பு தங்களது வாகனங்களை நிறுத்தவே பொதுமக்கள் அச்சப்பட்டனர்.

போலீசாருக்கு சவால் விடும் வகையில்...

இதேபோல் இரு சக்கர வாகனங்களை எரிக்கும் நபரை பிடிப்பது போலீசாருக்கும் பெரும்சவாலாக இருந்தது. எரியோடு பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இருப்பினும் மர்ம நபரை பிடிப்பது குதிரைக்கொம்பாகவே இருந்து வந்தது. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபரின் உருவம் பதிவாகவில்லை.

'பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்' என்பதை போல, இதுவரை கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகாத மர்ம நபரின் உருவம் நேற்று முன்தினம் பதிவாகி இருந்தது. எரியோடு துரைச்சாமி நாடார் தெரு, மாலைக்கோவில் தெருவில் இருந்து கரூர் சாலைக்கு மர்ம நபர் நள்ளிரவில் நடந்து செல்லும் உருவம் பதிவாகி இருந்தது. அதனை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி, போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

தச்சுத்தொழிலாளி

விசாரணையில் அந்த நபர், எரியோடு மாலைகோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது 28) என்பது தெரியவந்தது. தச்சுதொழிலாளியான அவரை பிடித்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமையிலான தனிப்படையினர் விசாரித்தனர்.

அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது தச்சு வேலை மூலம் கிடைத்த பணத்தில் மதுபானம் குடித்து விட்டு, போதை தலைக்கு ஏறியதும் நள்ளிரவில் தனது கண்ணில் தென்படுகிற மோட்டார் சைக்கிள், மொபட்டுகளுக்கு தீ வைத்து அவர் எரித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைது

மது போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவுக்கு இந்த சம்பவத்தில் அவர் ஈடுபட்டதாக போலீசாரிடம் மணிகண்டன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

எரியோட்டில் நள்ளிரவில் அடுத்தடுத்து 9 மொபட்டு மற்றும் மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்து, போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த வாலிபர் கைதான சம்பவம் பொதுமக்களை நிம்மதி அடைய செய்தது.


Next Story