கோவில் திருவிழாவில் தொழிலாளி அடித்துக்கொலை
திருவோணம் அருகே கோவில் திருவிழாவில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒரத்தநாடு:
திருவோணம் அருகே கோவில் திருவிழாவில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவில் திருவிழா
தஞ்சை மாவட்டம் திருவோணத்தை அடுத்துள்ள வாட்டாத்திக்கோட்டை கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு சம்பவத்தன்று இரவு நாடகம் நடந்தது. இந்த நிகழ்ச்சியை பார்க்க வந்திருந்த அதே பகுதியை சேர்ந்த இரு பிரிவினருக்கிடையே தகராறு ஏற்பட்டு மோதல் உருவானது.
இந்த மோதலில் வாட்டாத்திக்கோட்டையை சேர்ந்த நீதி(வயது 38), நீதியின் அண்ணன் அழகர்(43) உள்பட சிலர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அழகர் கொடுத்த புகாரின் பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீசார் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். மற்றொரு தரப்பில் அஜித்(27) என்பவர் கொடுத்த புகாரின் பேரிலும் சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கொலை வழக்கு
இந்த நிலையில் தலையில் படுகாயம் அடைந்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி நீதி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட நீதியின் உறவினர்கள் நேற்று வா.கொல்லைக்காடு பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியும், கொலை செய்யப்பட்ட நீதியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கேட்டு கோஷம் எழுப்பினர்.
போக்குவரத்து பாதிப்பு
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை விரைவாக எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
அதன்பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த வழித்தடத்தில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.