தீப்பெட்டி ஆலை கழிவுகளை எரித்த தொழிலாளி கருகி சாவு
தீப்பெட்டி ஆலை கழிவுகளை எரித்த தொழிலாளி கருகி இறந்தார்.
விருதுநகர் அருகே உள்ள வலையபட்டி கிராமத்தில் சாத்தூரை சேர்ந்த பத்மநாபன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை உள்ளது. இங்கு வழக்கமாக தீப்பெட்டி ஆலையின் பின்புறம் உள்ள ஒரு குழியில் ஆலை கழிவுகளை போட்டு தீயிட்டு எரித்து அழிப்பது வழக்கம். நேற்று இந்த பணியில் அருப்புக்கோட்டை தாலுகாவில் உள்ள கூத்திப்பாறை கிராமத்தை சேர்ந்த முருகன் (வயது 55) என்ற தொழிலாளி ஈடுபட்டார். அப்போது அவர், கழிவுகளை எரிக்கும் போது நச்சுப்புகை வெளியேறியதால் மயக்கம் அடைந்து கழிவுகளை எரித்த குழிக்குள்ளே விழுந்தார். இதனால் தீயில் கருகி அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபரீத சம்பவம் குறித்து தகவல் அறிந்த பிற தொழிலாளர்கள் உடனடியாக விரைந்து சென்று அவர் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முருகனின் குடும்பத்தினர் நிவாரணம் கேட்டு போராடினர். ஆலை நிர்வாகம் சார்பில் உரிய நிவாரணம் அளிப்பதாக உறுதி அளித்ததின் பேரில் இறந்த முருகனின் உடல் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.