விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
கூடலூரில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்
கூடலூர் 13-வது வார்டு எம்.ஜி.ஆர்.காலனியைச் சேர்ந்தவர் முத்து காமாட்சி (வயது 56). இவரது மனைவி மகாலட்சுமி. இவர்கள் இருவரும் கூடலூர் மந்தை வாய்க்கால் பாலம் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மகாலட்சுமி கோபித்து கொண்டு தோட்டத்தில் இருந்து வெளியே சென்று விட்டார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் தோட்டத்திற்கு அவர் வந்தபோது முத்து காமாட்சி பூச்சி மருந்தை (விஷம்) குடித்துவிட்டு வாந்தி எடுத்துக்கொண்டிருந்தார். இதைக்கண்ட மகாலட்சுமி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.