சாகப்போவதாக மனைவிக்கு தகவல் தெரிவித்து விட்டு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
புவனகிரி அருகே சாகப்போவதாக மனைவிக்கு செல்போனில் தகவல் தெரிவித்துவிட்டு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி,
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் மகன் மணியரசன்(வயது 25), கூலி தொழிலாளி. இவர் அதே ஊரை சேர்ந்த ரமேஷ் மகள் சுவேதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மணியரசன் வேலைக்கு செல்லாமல் தினசரி மதுகுடித்து விட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் கோபித்துக்கொண்ட சுவேதா, அருகில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மணியரசன் தனது மனைவி சுவேதாவை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு சுவேதா மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மணியரசன், தனது மனைவியிடம் நான் தூக்குப்போட்டு சாகப்போகிறேன் என்று கூறிவிட்டு செல்போனை துண்டித்ததாக தெரிகிறது.
போலீசார் விசாரணை
இதனால் அதிர்ச்சியடைந்த சுவேதா, உறவினர்களுடன் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டில் மணியரசன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணியரசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாாின்பேரில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.