சாத்தான்குளம் அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
சாத்தான்குளம் அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் அருகே மது குடிப்பதை மனைவி மற்றும் பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி
சாத்தான்குளம் அருகேயுள்ள செட்டிகுளம் கீழத்தெருவை சேர்ந்த சுடலைமணி மகன் முத்துக்குமார்(வயது45). கூலி தொழிலாளி. இவருக்கு செல்வி என்ற மனைவியும், ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர்.
இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் இவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனை அவரது மனைவி மற்றும் பெற்றோர் கண்டித்துள்ளனர். ஆனாலும் அவர் மதுகுடிப்பதை நிறுத்தவில்லை.
மனைவி கண்டிப்பு
நேற்று முன்தினம் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய அவர் கீழே தவறி விழுந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வீட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். மதுபோதையில் இருந்த அவரை மனைவியும், பெற்றோரும் கண்டித்துள்ளனர்.
தற்கொலை
இதில் மனமுடைந்து காணப்பட்ட அவர், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவரது மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் சம்பவ வீட்டுக்கு சென்று, முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.