நடத்தையில் சந்தேகத்தால் மனைவியை வெட்டிய தொழிலாளி
செய்யாறு அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை சரமாரியாக தொழிலாளி வெட்டினார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.
செய்யாறு அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை சரமாரியாக தொழிலாளி வெட்டினார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.
வேறொருவருடன் திருமணம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா செங்கட்டான்குண்டில் கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகா (வயது 54). இவர், மரம் வெட்டும் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் சின்னராஜ் இறந்த நிலையில் தனது குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு மரம் வெட்ட சென்ற இடத்தில் கீழ்வெள்ளியூர் கிராமத்தை சேர்ந்த தசரதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து தசரதன் மனைவி ஜீவா தனது மகன்கள் மாரிமுத்து, மணி மற்றும் மகள் பரமேஸ்வரி ஆகியோரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் தசரதன் தனது குழந்தைகளுடன் மல்லிகா வீட்டில் வசித்து வந்துள்ளார்.
நடத்தையில் சந்தேகம்
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாகவே மல்லிகாவின் நடத்தையில் சந்தேகமடைந்த தசரதன் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு கிராமத்தில் திருவிழா நடந்ததால் குழந்தைகள் அனைவரும் அதனை கண்டு களிக்க சென்ற போது வீட்டில் தனியாக இருந்த மல்லிகாவை, தசரதன் மரம் வெட்டும் அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் அங்கிருந்து தசரதன் தப்பி சென்றுவிட்டார். உடனே ரத்த வெள்ளத்தில் கிடந்த மல்லிகாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்பேரில் செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவரை தேடி வருகிறார்.