கதவணை கட்டும் பணிக்கு சென்ற தொழிலாளி சாவு


கதவணை கட்டும் பணிக்கு சென்ற தொழிலாளி சாவு
x

மணல்மேடு அருகே கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும் பணிக்கு சென்ற தொழிலாளி உயிரிழந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உறவினர்கள், பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை

மணல்மேடு;

மணல்மேடு அருகே கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டும் பணிக்கு சென்ற தொழிலாளி உயிரிழந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உறவினர்கள், பா.ம.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கதவணை கட்டும் பணி

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள குமாரமங்கலம், கடலூர் மாவட்டம் ஆதனூர் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1064 மீட்டர் தூரத்துக்கு ரூ.379 கோடி மதிப்பில் கதவணை கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. கதவணை கட்டுமான பணியில் மணல்மேடு அருகே உள்ள சீப்புலியூர் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் மகன் அறிவழகன்(வயது 35) என்பவர் கடந்த சில ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.

பிணமாக கிடந்தார்

இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி காலை வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அறிவழகன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.இது குறித்து அவரது மனைவி கவுரி(22) மணல்மேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் கதவணை கட்டுமான பணி நடைபெறும் இடத்துக்கு சற்று தூரத்தில் கொள்ளிடம் ஆற்றில் அறிவழகன் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அறிவழகன் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.மேலும் அணை கட்டுமான நிறுவன ஊழியர்கள் சிலரையும் விசாரணைக்காக போலீஸ் வேனில் ஏற்றி அழைத்துச் செல்ல முயன்றனர்.

சாலை மறியல்

இந்த நிலையில் அறிவழகன் உயிரிழந்தது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள், பா.ம.க.வினர் மற்றும் சீப்புலியூர் கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்து அறிவழகனின் உடலை எடுத்து செல்ல விடாமல் தடுத்ததுடன், கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏற்றப்பட்ட வேனையும் மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு மேலாக இந்த போராட்டம் நீடித்தது. சாலை மறியலில் ஈடுபட்டவர்கள், அறிவழகனை சிலா் பொக்லின் எந்திரத்தால் மோதி கொலை செய்துவிட்டு கொலையை மறைப்பதாகவும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த அறிவழகன் குடும்பத்துக்கு உாிய இழப்பீடு வழங்க வேண்டும், அறிவழகன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்தனர்.

பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மயிலாடுதுறை ராஜ்குமார் எம்.எல்.ஏ., தாசில்தார் மகேந்திரன், மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அறிவழகனின் உறவினர்கள் மற்றும் பா.ம.க.வினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.சாலை மறியல் கைவிடப்பட்ட பின்னர் அறிவழகன் உடலை பாலீசார் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்றனர்.போலீஸ் வாகனத்தை மறித்து திடீரென நடந்த இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story