லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி
லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலியானார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 48), கூலித்தொழிலாளி. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து சாமுண்டி சந்திப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு ஏ.டி.சி. பஸ் நிலையத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கணேஷ் சாலையில் விழுந்தார். அப்போது ஊட்டி பர்ன்ஹில் பகுதியில் விறகு ஏற்றிக்கொண்டு கோவைக்கு சென்று கொண்டிருந்த லாரி சக்கரம் அவர் மீது ஏறி இறங்கியது.
இதில் படுகாயம் அடைந்த கணேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஊட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் வனக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குன்னூர் ஓட்டுப்பட்டறையை சேர்ந்த டிரைவர் சலீமை கைது செய்தனர். விபத்து காரணமாக அப்பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.