கச்சிராயப்பாளையம் அருகேமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவுதிருமணநாளில் தந்தையிடம் ஆசிர்வாதம் வாங்கி வந்தபோது சோகம்
கச்சிராயப்பாளையம் அருகே திருமணநாளில் தந்தையிடம் ஆசிர்வாதம் வாங்கி வந்த போது, மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்தவாய்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் பெருமாள் (வயது 43). தொழிலாளி. இவரது மனைவி பார்வதி. இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள கிருஷ்ணா நகரில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று திருமண நாள் என்பதால், எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் உள்ள தன் தந்தை பெரியசாமியிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்காக வீட்டுக்கு சென்றார்.
மரத்தில் மோதி விபத்து
அங்கு தன் தந்தையை பார்த்து ஆசிர்வாதம் பெற்றுகொண்டு மீண்டும் கள்ளக்குறிச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, கச்சிராயப்பாளையம் அடுத்த நல்லாத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இதுகுறித்து கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.