வேகத்தடையில் நிலைதடுமாறி விழுந்த தொழிலாளி சாவு
மயிலாடுதுறையில் வேகத்தடையில் நிலைதடுமாறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
மயிலாடுதுறை திருவிழந்தூர் ஆழ்வார்குளத் தெருவை சேர்ந்தவர் கணபதி மகன் தியாகராஜன் (வயது 34). ஓட்டல் தொழிலாளி. இவர், மயிலாடுதுறை கூறைநாட்டில் சாலையோர டிபன் கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தியாகராஜன் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார். அப்போது மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி சாலையை கடந்தபோது அங்கு சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் காயமடைந்த தியாகராஜனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை தியாகராஜன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.