மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
தண்ணீர் மோட்டார் சுவிட்சை போட்டபோது மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
அவனியாபுரம்,
தண்ணீர் மோட்டார் சுவிட்சை போட்டபோது மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கட்டிட தொழிலாளி
மதுரை அவனியாபுரம் பெருங்குடி அருகே உள்ள பெரிய ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 40). இவருக்கு திருமணமாகி ஜோதிமணி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்த பாலமுருகன் வழக்கமாக பெரிய ஆலங்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குளியல் தொட்டிக்கு குளிக்க செல்வார். நேற்று காலை 7 மணிக்கு சென்றவர் தொட்டியில் தண்ணீர் இல்லாததால் அங்கு திறந்த நிலையில் இருந்த மின்சார பெட்டியில் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார்.
மின்சாரம் தாக்கி பலி
அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்து வந்த பெருங்குடி போலீசார் பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.