மோர்தானா அணை கால்வாயில் மூழ்கி தொழிலாளி பலி
குடியாத்தம் அருகே மோர்தானா அணை கால்வாயில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
குடியாத்தத்தை அடுத்த முக்குன்றம் கிராமத்தைச் சார்ந்தவர் பிரவீன் குமார் (வயது 30), கூலி தொழிலாளி. இவருக்கு கோமதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற பிரவீன்குமார் பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை முக்குன்றம் கிராமம் அருகே உள்ள காத்தாடிகுப்பம் மோர்தானா கால்வாயில் பிரவீன்குமார் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்தும் விரைந்து வந்த உறவினர்கள் குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மோர்தானா கால்வாயில் மூழ்கியிருந்த பிரவீன்குமார் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் பிரவீன்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமார் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது தவறி விழுந்தாரா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.