தொழிலாளி தூக்குப்போட்டு சாவு; தற்கொலைக்கு தூண்டிய மனைவி கைது
திருக்குறுங்குடி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு இறந்த வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக மனைவியை போலீசார் கைது செய்தனர். மேலும் மனைவியின் கள்ளக்காதலனை வலைவீசி தேடி வருகின்றனர்.
ஏர்வாடி:
திருக்குறுங்குடி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு இறந்த வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக மனைவியை போலீசார் கைது செய்தனர். மேலும் மனைவியின் கள்ளக்காதலனை வலைவீசி தேடி வருகின்றனர்.
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே மலையடிபுதூர் பருத்திவிளை தெருவைச் சேர்ந்தவர் ராமையா. இவருடைய மகன் அய்யப்பன் (வயது 35). கூலி தொழிலாளி.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள கோவிலில் சாமி சிலை சேதப்படுத்தப்பட்டது. அப்போது அய்யப்பன்தான் சாமி சிலையை சேதப்படுத்தினார் என்றும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.இதனால் போலீசாரின் விசாரணைக்கு பயந்து அய்யப்பன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
கள்ளக்காதல்
இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அய்யப்பனின் மனைவி ஈசுவரி (29) கள்ளக்காதலை கைவிடாததால்தான் அய்யப்பன் தற்கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
அய்யப்பன்-ஈசுவரி தம்பதிக்கு 2 மகன்களும், 1 மகளும் உள்ளனர். ஈசுவரி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி சீனித்துரையின் தோட்டத்தில் கூலி வேலைக்கு சென்று வந்தார். அப்போது சீனித்துரைக்கும், ஈசுவரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலானது.
மனைவி கைது
சம்பவத்தன்று அய்யப்பன் தனது வீட்டுக்கு சென்றபோது, அங்கு மனைவி ஈசுவரியுடன் சீனித்துரை பேசி கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அய்யப்பன், அவர்கள் 2 பேரையும் கண்டித்தார். மேலும் தனது வீட்டில் இருந்த துணிகளையும் தீ வைத்து எரித்தார்.
பின்னர் அங்குள்ள கோவிலுக்கு சென்ற அய்யப்பன், சுவாமி சிலையை சேதப்படுத்தி உள்ளார். அதன்பிறகு வீட்டுக்கு சென்ற அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து கணவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஈசுவரியை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான சீனித்துரையை வலைவீசி தேடி வருகின்றனர்.