சிறுத்தை தாக்கி தொழிலாளி படுகாயம்


சிறுத்தை தாக்கி தொழிலாளி படுகாயம்
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே சிறுத்தை தாக்கியதில் தொழிலாளி படுகாயமடைந்தார்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே சிறுத்தை தாக்கியதில் தொழிலாளி படுகாயமடைந்தார்.

சிறுத்தை தாக்கியது

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மேல் பரவக்காடு டேன்டீ (தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம்) குடியிருப்பில் வசிப்பவர் பன்னீர்செல்வம் (வயது 51). இவர் டேன்டீயில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு பன்னீர்செல்வம் இயற்கை உபாதையை கழிப்பதற்காக தனது வீட்டிற்கு அருகே உள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்று உள்ளார்.

அப்போது திடீரென அப்பகுதியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் பன்னீர்செல்வத்தை தாக்கியது. இதனால் அவர் படுகாயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்ததை கண்ட சிறுத்தை, அங்கிருந்து ஓடி சென்று மறைந்தது. சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்த பன்னீர்செல்வத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குயின்சோலை டேன்டீ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

வனத்துறையினர் ஆய்வு

பின்னர் அவர் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவலறிந்த கீழ்கோத்தகிரி வனச்சரகர் ராம்பிரகாஷ் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். மேலும் படுகாயமடைந்த பன்னீர்செல்வத்தை ஆஸ்பத்திரியில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் வனவிலங்குகள் தாக்குதலால் காயமடைந்தவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரண தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, டேன்டீ குடியிருப்புகளில் முறையான கழிப்பிட வசதிகள் இல்லை. எனவே, தொழிலாளிகள் திறந்தவெளியை பயன்படுத்த வேண்டி உள்ளது. குடியிருப்பு பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், சிறுத்தை, காட்டெருமை மற்றும் கரடிகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால் அடிக்கடி மனித வனவிலங்கு மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. எனவே, தொழிலாளர்கள் நலன் கருதி டேன்டீ குடியிருப்பு பகுதியில் கழிப்பிடங்கள் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story