கார் மோதி தொழிலாளி படுகாயம்
திருவேங்கடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
திருவேங்கடம்:
திருவேங்கடம் தாலுகா அத்திப்பட்டியைச் சேர்ந்தவர் பலவேசத்தேவர் மகன் நவநீதகிருஷ்ணன் (வயது 30). இவர் திருவேங்கடத்தை அடுத்த வரகனூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே ஊரில் ஒரு பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் இவர் திருவேங்கடம் வந்து வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
கீழ திருவேங்கடம் கிராமத்தில் சென்றபோது பின்னால் வந்த கார் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நவநீதகிருஷ்ணன் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.