பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளி காயம்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி காயம் அடைந்தார்.
சிவகாசி,
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி காயம் அடைந்தார்.
வெடி விபத்து
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வி.சொக்கலிங்காபுரத்தில் கமலக்கண்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலை நாக்பூர் உரிமம் பெற்றது. இதில் 60 அறைகள் உள்ளன. இதில் 75-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. மதிய நேரத்தில் அறை எண் 58-ல் ஜமீன்சல்வார் பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன் (வயது 42) என்பவர் புல்லட்பாம் வகை பட்டாசுகளை தயார் செய்து கொண்டிருந்தார். உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தொழிலாளி காயம்
இதில் தொழிலாளி மாரீஸ்வரனுக்கு கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டது. உடனே ஆலையில் இருந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர் அய்யனார் தலைமையிலான டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.