மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
பாவூர்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டி, முருகன்குறிச்சியை சேர்ந்தவர் ராமநாதன் மகன் வனராஜ் (வயது 36). இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தார். நேற்று நெல்லை- தென்காசி ரோட்டில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் இவர் மற்றும் இவருடன் 3 பேர் வேலையில் ஈடுபட்டிருந்தனர். ஒரு பகுதியில் வேலையை முடித்துவிட்டு, மற்றொரு பகுதியில் வேலை செய்வதற்காக அங்கிருந்த இரும்பு ஏணியை நகர்த்தி உள்ளனர். அப்போது அந்த ஏணி, அருகில் இருந்த மின்கம்பிகளில் பட்டு வனராஜ் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் மயங்கி விழுந்தார். மற்ற மூன்று பேரும் தூக்கி எறியப்பட்டனர்.
வனராஜை உடனடியாக பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவரை உடனடியாக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல கூறினர். அதன்படி வனராஜாவை அங்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் மின்சாரம் தாக்கியதில் கருப்பசாமி (39) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்ற 2 பேரும் காயம் இன்றி தப்பினர். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.