தொழிலாளி கழுத்து அறுத்துக்கொலை


தொழிலாளி கழுத்து அறுத்துக்கொலை
x

தண்டராம்பட்டு அருகே தொழிலாளி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு அருகே தொழிலாளி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள தரடாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 42), தொழிலாளி. இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால் 6 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் தனியாக வசித்து வந்த ரவீந்திரன் மும்பை சென்று அங்கு ரெயில் நிலையங்களில் பூ வியாபாரம் செய்துள்ளார். இவரது சகோதரிகள் தண்டராம்பட்டு அருகில் உள்ள தென்கரும்பலூர் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

கழுத்து அறுத்துக்கொலை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது சொந்த ஊரான தரடாப்பட்டு கிராமத்திற்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரவீந்திரன் வந்துள்ளார்.

இந்த நிலையில் தரடாப்பட்டில் இருந்து சாத்தனூர் செல்லும் மெயின் ரோட்டையொட்டி ரவீந்திரன் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார். அருகில் மது பாட்டில்களும் இருந்தன. மேலும் அருகில் உள்ள சுவரில் ரத்தம் படிந்த அடையாளங்கள் காணப்பட்டன.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இது குறித்து தகவல் அறிந்ததும் தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார் அங்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் விசாரணை நடத்தினார். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது, சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் 'கவ்வி' பிடிக்கவில்லை.

தனிப்படை அமைப்பு

இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story