கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு தவறான அறுவை சிகிச்சை கலெக்டரிடம் தொழிலாளி மனு
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தொழிலாளி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.
பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூரை சேர்ந்த தொழிலாளி வெங்கடேசன் என்பவர் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியமிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
எனது மனைவி பத்மாவதியை பிரசவத்திற்காக கடந்த 19.9.2022 அன்று கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். அங்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் 11 நாட்களுக்கு பிறகு ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு அனுப்பினர். இதையடுத்து கடந்த 14-ந் தேதி பத்மாவதிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தேன். அங்கிருந்து கடலூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் வயிற்று வலி குணமாகவில்லை. பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்ததும், அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்த போது குடல் பகுதியையும், வயிற்றையும் ஒன்றாக வைத்து தைத்ததால் தான் வலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு கூடுதல் அறுவை சிகிச்சை செய்ததில், வயிற்று வலி குணமானது. இருப்பினும் தவறான அறுவை சிகிச்சை செய்த கடலூர் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.