கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
சேலம் செவ்வாய்பேட்டை வெங்கடப்பன் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர், அப்பகுதியில் தள்ளுவண்டியில் மாலைநேர சில்லி சிக்கன் கடை நடத்தி வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ந் தேதி கடையில் மணிகண்டனும், அவருடைய மகன் மனோஜ் (15) என்பவரும் இருந்தனர். அப்போது, சேலத்தாம்பட்டியை சேர்ந்த தொழிலாளி ராமு (48) என்பவர் மதுபோதையில் வந்து ஓசிக்கு சில்லி சிக்கன் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்கு பணம் கொடுத்தால்தான் சில்லி சிக்கன் தருவேன் என்று மணிகண்டன் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமு, சில்லி சிக்கன் பொறிக்க சட்டியில் இருந்த கொதிக்கும் எண்ணெயை எடுத்து மணிகண்டனின் மகன் மனோஜ் மீது ஊற்றினார். இதில் அவரது உடலில் பட்டதால் தீக்காயம் அடைந்து சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து செவ்வாய்பேட்டை போலீசார் ராமு மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று நீதிபதி கிறிஸ்டல் பபிதா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இறுதி விசாரணை முடிந்த தீர்ப்பு கூறப்பட்டது. அதில், ராமுவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.17 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.