தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
சில்மிஷம்
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள பழையூர் அய்யம்பெருமாபட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 50), விவசாய கூலித்தொழிலாளி. கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பள்ளிக்கூடம் முடிந்து, 12 வயதுடைய 7-ம் வகுப்பு மாணவிகள் 2 பேர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பழனிசாமி அந்த மாணவிகளின் தோளில் கைகளை போட்டதுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்த மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
7 ஆண்டு சிறை
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பழனிசாமிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார்.