முன்விரோத தகராறில் தொழிலாளிக்கு கத்திக்குத்து
வேலூரில் முன்விரோத தகராறில் தொழிலாளிக்கு கத்திக்குத்து விழுந்தது.
வேலூர் சார்பனாமேடு தேவராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் சலீம் (வயது 34), கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அப்ரோஸ் என்கிற ஜப்பான் (19), ஓல்டுடவுன் பகுதியை சேர்ந்த ஜெகன் (19) மற்றும் காளி என்கிற அருணாச்சலம் (20) ஆகியோருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சார்பனாமேடு ஆட்டோ நிறுத்தம் அருகே சலீம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அப்ரோஸ், ஜெகன், காளி ஆகியோருக்கும், சலீமுக்கும் இடையே முன்விரோதம் காரணமாக வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த அப்ரோஸ் உள்ளிட்ட 3 பேரும் சலீமை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவர்கள் சலீமின் மார்பு மற்றும் வயிற்றில் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடினர். இதில் சலீம் படுகாயம் அடைந்தார்.
தகவலறிந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சலீமை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்ரோஸ், ஜெகன், காளி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.